தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் சிவபெருமான் இத்தலத்தில் வேதத்துக்கு பொருள் கூறிய காரணத்தால் 'திருவோத்தூர்' என்ற பெயர் பெற்றது. சிவபூஜைக்கு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட நதியாதலால் 'சேயாறு' என்று பெயர் பெற்று பின்னர் மருவி 'செய்யாறு' என்று அழைக்கப்படுகிறது. முருகனுக்கு 'சேயோன்' என்ற பெயரும் உண்டு.
மூலவர் 'வேதபுரீஸ்வரர்', 'வேதநாதேஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'இளமுலை நாயகி', 'பாலகுஜாம்பிகை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சண்முகர், பஞ்ச பூதத் தலங்களைக் குறிக்கும் பஞ்ச லிங்கங்கள், பைரவர், நவக்கிரகங்கள் தரிசனம் தருகின்றனர்.
சிவபெருமானின் ஆணைப்படி, தொண்டைமான் என்னும் அரசனின் படைக்குத் துணையாக நந்திதேவர் சென்றதால் இங்கு மூலவருக்கு எதிர் திசையில் திரும்பியுள்ளார்.
கோயிலில் இருந்த பனை மரங்கள் எல்லாம் ஆண் பனைகளாக இருப்பதைக் கண்டு மாற்று சமயத்தவர் நகையாடினர். தல யாத்திரையாக அங்கு வந்த ஞானசம்பந்தரிடம் அடியார்கள் இதுபற்றி தெரிவிக்க, அவரும் பதிகம் பாடி ஆண் பனையை பெண் பனையாக மாற்றினார்.
இக்கோயிலின் பிரகாரத்தில் 11 தலையுள்ள நாக தேவதை உள்ளது. சனிக்கிழமை ராகு காலத்தில் மக்கள் இங்கு வழிபாடு நடத்துகின்றனர். அதனால் நாகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|